தனுஷ்கோடியில் அமைய உள்ள கலங்கரை விளக்கத்தின் மாதிரி படம். 
தமிழகம்

தனுஷ்கோடியில் பிப்ரவரி-18-ல் பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்; ரூ.7 கோடியில் புதிய கலங்கரை விளக்கம்: இலங்கை தலைமன்னார் வரை ஒளிவீசும்

செய்திப்பிரிவு

தனுஷ்கோடியில் ரூ.7 கோடி செலவில், புதிய கலங்கரை விளக்கம் அமைக்கும் பணிகள் பிப்.18-ம் தேதி பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது. இந்த கலங்கரை விளக்கம் இலங்கை தலைமன்னார் வரை ஒளிவீசும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் பாண்டிய மன்னர்கள் காலம்தொட்டு தனுஷ்கோடி பிரதான துறைமுகமாக விளங்கிஉள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார், யாழ்ப்பாணம், கொழும்புக்கு தினசரி தோணிகள் மூலம் போக்குவரத்தும் நடைபெற்று வந்துள்ளது. மார்க்கோபோலோ, இப்னு பதூதா போன்ற புகழ்பெற்ற வரலாற்று யாத்ரீகர்கள் தங்களின் பயணக் குறிப்புகளில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நடைபெற்ற முத்துக்குளித்தலைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

கப்பல், ரயில் போக்குவரத்து

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மன்னார் மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்.24-ம் தேதி, போட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தை சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பலும் இயக்கப்பட்டது.

1964 டிச.22-ல் தனுஷ்கோடியை தாக்கிய புயலில் தனுஷ்கோடி துறைமுகம், படகுத்துறை, ரயில்நிலையம், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பெரிய கட்டிடங்கள் அனைத்தும் அழிந்தன. புயலால் அழிந்துபோன தனுஷ்கோடியை பார்வையிட தினமும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைப்பது குறித்துசமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டநிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், தனுஷ்கோடியில் உள்ள கம்பிப்பாடு பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்கத் தேவையான இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்க, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் மண் ஆய்வு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில், தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் தேர்வு செய்யப்பட்ட நிலத்தை கலங்கரை விளக்க இயக்குநர் வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை பார்வையிட்டனர்.

இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

தனுஷ்கோடியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பிப்.18-ம் தேதி புதிய கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான பூமி பூஜையைத் தொடங்கி வைக்க உள்ளார்.

50 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்தக் கலங்கரை விளக்கத்தில் 18 கடல் மைல் (33.3 கி.மீ.) தூரம் ஒளிவீசும் திறன் கொண்ட விளக்கு பொருத்தப்படும். இது இலங்கையின் தலைமன்னார் வரை ஒளிவீசும். (தலை மன்னார் தனுஷ்கோடியில் இருந்து 15 கடல் மைல் தூரத்தில் உள்ளது). சூரியஒளி மின்சாரம் மூலம், இந்த கலங்கரை விளக்கம் செயல்படும். கலங்கரை விளக்கத்தில் ரேடார் பொருத்தப்பட்டு, இந்த பகுதியில் வந்து செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும் என்றனர்.

மேலும் தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வசதி செய்யப்படும் எனத் தெரிகிறது. ராமேசுவரம் தீவில் பாம்பன் மற்றும் பிசாசு முனை ஆகியப் பகுதிகளில் ஏற்கெனவே இரு கலங்கரை விளக்கங்கள் உள்ளன. 50 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்தக் கலங்கரை விளக்கத்தில் 18 கடல் மைல் (33.3 கி.மீ.) தூரம் ஒளிவீசும் திறன் கொண்ட விளக்கு பொருத்தப்படும்.

SCROLL FOR NEXT