தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 14-வது நிதி ஆணைய பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ரூ.6,374 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பல்வேறு பணிகள் தொடர்பாக நேற்று டெல்லி சென்றார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்தார். அப்போது தமிழக முதல்வர் பழனிசாமி அளித்த கோரிக்கை கடிதத்தை அவரிடம் அளித்தார்.
அந்த கடிதத்தில், “14-வது மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி, தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 2017-18 முதல் 2019-20 வரை வழங்க வேண்டிய செயல்பாட்டு மானியம் ரூ.2,029 கோடி நிலுவையில் உள்ளது. அதேபோல், 2019-20-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.4,345 கோடி என ரூ.6,374 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்” என்றுமுதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, கோவையில் இருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளது குறித்தும் தெரிவித்தார்.
அமைச்சருடன் சந்திப்பு
பின்னர் மத்திய வேளாண்மை மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை அமைச்சர் வேலுமணி சந்தித்தார். அவரிடம் அளித்த கடிதத்தில்,‘‘தமிழக அரசு மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிர்ணயிக்கும் கால அட்டவணையின்படி பணிகளை முடித்து வருகிறது.
இந்த வகையில், கடந்தபிப்.10-ம் தேதி வரையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கவும், தளவாடங்கள் வாங்கவும் தேவைப்படும் நிர்வாக செலவுக்காக ரூ.609.18 கோடி, 2019-20-ம்நிதியாண்டில், 2-வது கட்டமாக வழங்க வேண்டிய, ரூ.2,939 கோடிஎன ரூ.3,518.18 கோடியை வழங்கவேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டி ருந்தது.
விமான சேவை
மத்திய விமான போக்குவரத்து மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரியையும் அமைச்சர் வேலுமணி சந்தித்தார்.
அவரிடம், கோவையில் இருந்து டெல்லிக்கு தினசரி காலையிலும், துபாய்க்கு தினசரியும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், “கோவை விமான நிலைய விரிவாக்கம், சரக்கு முனையத்துக்காக 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.264.47 கோடிஒதுக்கப்பட்டது. தற்போது நிலஉரிமையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூடுதலாக 5.76 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த இடம் முந்தைய அறிவிக்கையின் கீழ்வராததால், இந்த நிலத்தை கையகப்படுத்துவது இயலாதகாரியமாகும்.
நில உரிமையாளர்கள் அதிக தொகை கோருவதால், இது அரசுக்கு மிகுந்த சுமையை ஏற்படுத்தும். மேலும் திட்டத்தை திருத்துவது என்பது மிகுந்த காலவிரயத்தை ஏற்படுத்தும். எனவே,விமான நிலைய விரிவாக்கப்பணிகளை முடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.