படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறிவிட்டு கடந்த 3 ஆண்டுகளில் 2000 டாஸ்மாக் கடைகளைத் திறந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுதான் படிப்படியாக மதுவிலக்கு அமலாவதா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகரித்து வருவதை எதிர்த்து கடுமையான போராட்டம் நடந்தது. பொதுமக்கள் கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தியதால் மதுவிலக்கு குறித்து அறிவிக்கும் நிலைக்கு திமுக, அதிமுக கட்சிகள் தள்ளப்பட்டன. 2016 தேர்தலில் பிரதான கோஷமே மதுவிலக்காகத்தான் இருந்தது. தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும், ஆண்டுக்கு 500 கடைகள் மூடப்படும், மதுக்கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படும் என அதிமுக அறிவித்தது.
ஜெயலலிதா மறைந்ததும் முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி 500 மதுக்கடைகளை மூடும் கோப்பில் முதல் கையெழுத்து போட்டார். அதே காலகட்டத்தில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகளாக மாற்றி மதுக்கடைகளைப் பாதுகாக்கும் வேலை நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3000-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடும் நிலை ஏற்பட்டது. ஆனால் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு, மதுக்கடைகள் மூடும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
படிப்படியாக மதுவிலக்கு என்ற கோஷம் அதன்பிறகு பெரிய அளவில் எழவில்லை. இதன் விளைவு கடைகளின் எண்ணிக்கை ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கின. டாஸ்மாக் விற்பனை வருவாயும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போனது.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த 3 ஆண்டுகளில் மதுக்கடைகளின் எண்ணிக்கை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பது குறித்து விவரமாக எழுதியுள்ளது. அதன்படி 2017-18-ல் மதுக் கடைகளின் எண்ணிக்கை 2830 ஆகும். 2018-19 ஆண்டுகளில் 1036 கடைகள் அதிகப்படியாக திறக்கப்பட்டு 3866 ஆக உள்ளது.
2019-20ல் இது 1286 கடைகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு மொத்தம் 5152 கடைகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதாவது கடைசி மூன்று ஆண்டுகளில் 2,295 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த செய்தியை அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக 500 மதுக்கடைகளை மூடுவது, மதுக்கடை திறக்கும் நேரத்தில் 2 மணி நேரத்தைக் குறைப்பது என்கிற கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான #TASMAC புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்!
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.