வரும் கோடை சீசனில் நீலகிரி மலை ரயிலுக்கு ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 28 பெட்டிகள் உதகை-குன்னூர் இடையே பயன்படுத்தபடவுள்ளன.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அடையாளம் சுற்றுலா. இதில், முக்கிய அங்கம் வகிப்பது நீலகிரி மலை ரயில். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதல் இடம் பிடிப்பது நீலகிரி மலை ரயில்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.15 மணிக்கும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மதியம் 2 மணிக்கும் மலை ரயில் இயக்கப்படுகிறது.
நவீனப் பெட்டிகள்:
இந்நிலையில், உதகை-குன்னூரிடையே சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட புதிய பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் நீல நிறப் பெட்டிகளின் இருபுறமும் இயற்கையைப் பார்க்க கண்ணாடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
8 பெட்டிகள் பல மாதங்களுக்கு முன்பு வந்தன. தற்போது 7 பெட்டிகள் வந்துள்ளன. இவை உதகை-குன்னூரிடையே மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் 13 பெட்டிகள் ஐ.சி.எஃப்-ல் இருந்து வர உள்ளன.
எனவே, உதகை-குன்னூர் வழித்தடத்தில் மொத்தம் 28 புதிய நவீனப் பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்படும். கோடை சீசனில் மலை ரயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுவதால், சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும். இந்த ரயில்களில் புதிய நவீனப் பெட்டிகள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் பயணிகள் ஏமாற்றம்:
மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே முக்கியதுவம் அளிக்கப்படும் நிலையில், உள்ளூர் மக்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 4 பெட்டிகளில் 214 பயணிகள் பயணிக்க முடியும். அதில், ஒரு பெட்டியில், 100 பயணிகள் வரை பயணிக்க முன் பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கப்பட்டது. இதனால் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரும் பயனடைந்தனர்.
இந்நிலையில், அந்த நான்கு பெட்டிகளில், இரு பெட்டிகள் முதல் வகுப்பாகவும், பொதுவாக இருந்த மற்றொரு பெட்டி, முன்பதிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டது.
இதனால், கடைசி நேரத்தில், 28 பேருக்கு மட்டுமே, முன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று, அந்த டிக்கெட்டையும் வாங்கிச் செல்வதால், உள்ளூர் மக்களுக்குப் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மலை ரயில் ஆர்வலர்கள் கூறும் போது, ''குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் 120 நாட்களுக்கு முன்னதாகவே, சுற்றுலாப் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இதனால், உள்ளூர் மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 28 இருக்கைகள் மட்டுமே பொதுவாக இருக்கும் நிலையில், உதகையில் சுற்றுலாப் பயணிகள் ஏறி விடுகின்றனர்.
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதே நேரத்தில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு டிக்கெட் கூட வழங்குவதில்லை.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து உள்ளூர் மக்களும் பயன்பெறும் வகையில், கூடுதலாக பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும்'' என்றனர்.