தமிழகம்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதம் ஏன்?- மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

கி.மகாராஜன்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதியை முடிவு செய்ய முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீ்ந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மாநில தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ராஜா கார்த்திக்கேயன் வாதிடுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் தேதியை முடிவு செய்ய முடியவில்லை. எனவே மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

அவகாசம் வழங்க மனுதாரர் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையேற்க மறுத்து மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய 3 வார கால அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT