கிருஷ்ணகிரி அணையில் மதகுகள் மாற்றிமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், நீர்மட்டம் 24.8 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மதகுப் பகுதிக்கு கீழே தேங்கி நிற்கும் தண்ணீர். 
தமிழகம்

மதகுகள் மாற்றியமைக்கும் பணியின்போது கிருஷ்ணகிரி அணையை தூர்வார வேண்டும்: விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி அணையில் மதகுகள் மாற்றியமைக்கும் பணியின் போதே, அணையைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் (கேஆர்பி) கட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரிஅணை கட்ட கடந்த 1955-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி ரூ.1 கோடியே 84 லட்சத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. 1957-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பணிகள் நிறைவடைந்து அணை திறக்கப்பட்டது.

அணையின் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஅள்ளி, தளிஅள்ளி, பையூர் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை பாசனத் திட்டத்தின் கீழ் 2 பிரதான வாய்க்கால்கள் மற்றும் 26 சிறு பாசன ஏரிகள் மூலம் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. 60 ஆண்டுகளில் பாசன பரப்பு அதிகரித்து, 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் கிருஷ்ணகிரி அணையின் மூலம் பயன் அடைந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதான முதல் மதகு உடைந்தது. இதனைத் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மதகு பொருத்தப்பட்டது. பின்னர், அணையில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை வல்லுநர் குழுவினர் மீதமுள்ள 7 மதகுகளையும் மாற்றியமைக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில், அணை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.19.07 கோடி மதிப்பில் 7 புதிய மதகுகள் பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அணையில் மதகுகள் பொருத்தும் பணிகள் நடைபெறும் போதே, அணையை தூர்வார வேண்டும். விவசாயிகளுககு வண்டல் மண் இலவசமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, ‘‘தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டு 63 ஆண்டுகள் கடந்துள்ளது. இதுவரை அணை ஒரு முறை கூட தூர்வாரப்படவில்லை. அணை சுற்றளவில் 500 ஏக்கருக்கு 10 அடிக்கு மேல் வண்டல் மண் நிறைந்துள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 24.8 அடியாக குறைக்கப்பட்டு, மதகுகள் மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அணையை தூர்வார வேண்டும். ஏற்கெனவே இயற்கை விவசாயம் இல்லாமல் ரசாயன உரம் போட்டு மண் வளம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காடுகளில் இருந்து இலை, தழைகள் பறிக்கவும் வனத்துறையினர் அனுமதி வழங்குவதில்லை.

இவ்வாறான நிலையில், அணையில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலத்துக்கு பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் அணையைத் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

SCROLL FOR NEXT