கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காதலைக் கைவிட மறுத்த இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த, பெண்ணின் தம்பி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கிணத்துக்கடவு அடுத்த தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் தினேஷ் குமார்(23). கூலி தொழிலாளி. இவர் கடந்த இரு ஆண்டுகளாக சகோதரி முறையில் உள்ள பெண்ணை காதலித்துள்ளார். இதை அந்தப் பெண்ணின் தம்பி மணிகண்டன் கண்டித்துள்ளார். ஆனால் தினேஷ்குமார் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்தியநிலையில் வந்த மணிகண்டனுக்கும், வீட்டின் முன்பு அமர்ந்திருந்த தினேஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, தினேஷ்குமாரை கத்தியால் மணிகண்டன் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த தினேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீஸார் விசாரணை நடத்தி, மணிகண்டனைக் கைது செய்தனர்.