தமிழகம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை விரைவில் வெளியாகும்: என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

செய்திப்பிரிவு

விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களைக் காப்பாற்ற தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை வெளியிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

நாகை மாவட்டம் திருக்கடையூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை மக்கள் வரவேற்கிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைக்கு எதிரான எந்தவொரு தொழிற்சாலையும் வர தமிழக அரசு அனுமதிக்காது. சோழ மண்டல மக்கள் கையேந்தும் நிலை வரக்கூடாது என்று யோசித்து துணிச்சலாக முடிவெடுத்தவர் முதல்வர்.

விவசாயிகளைக் காப்பாற்ற, விவசாய நிலங்களைக் காப்பாற்ற தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை வெளியிடும்.

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுப்பதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் போடப்பட்டுள்ள குழாய்களை எல்லாம் ஓஎன்ஜிசி நிறுவனம் எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டியதுதான்.

ஏப்ரலில் தேர்தல்

மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் போடக் கூடியவராக தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளார்.

நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சித் தேர்தல் கண்டிப்பாக வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

SCROLL FOR NEXT