தேமுதிகவின் கொடிநாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்று, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேமுதிக சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 20-ம் தேதி கொடி நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்கட்சியின் 20-ம் ஆண்டு கொடிநாள் விழாவையொட்டி தேமுதிகதலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் 3 டன் எடையுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த 118 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார்.
பின்னர் அவர் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். ‘கேட்குதா சவுண்டு’ என்றுதனது பேச்சைத் தொடங்கிய விஜயகாந்த், அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். பின்னர், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ‘‘ஒட்டு மொத்த இளைஞர்கள், தளபதிகளைக் கொண்ட ஒரே இயக்கம் தேமுதிகதான். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்பதை முதன்முதலில் விஜயகாந்த் கூறியதைத்தான் ஜெகன்மோகன் ரெட்டி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர் பின்பற்றிவருகின்றனர். இனிவரும் காலங்களில் தேமுதிகவுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.
சாதி, மதம், பெயரைச் சொல்லி மக்களைப் பிரிக்கும் முயற்சியில் சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. ஆனால், சாதி, மதங்களைக் கடந்து, லஞ்சம், ஊழலை ஒழிக்கும் கட்சியாக தேமுதிக இருந்து வருகிறது.
கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி தேமுதிக. அதை, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அது எதிர் அணிக்கு சாதகமாகி விடும். வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம், காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த முதல்வருக்கு நன்றி.
எத்தனையோ சோதனைகள், சூழ்ச்சிகள் வந்தாலும் தேமுதிக என்ற கட்சி, வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நல்லதொரு ஆட்சியை மக்களுக்குத் தருவோம்’’ என்றார்.
தேமுதிக கொடி விழாவையொட்டி மேளதாளங்களுடன், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணை செயலர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் அனகை முருகேசன், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.