சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் ஒன்றாக ராஜீவ் காந்தி சாலை உள்ளது. இந்தச் சாலையில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதில் ஓஎம்ஆர்., பெருங்குடி, ஐடெல், ஈசிஆர்., உத்தண்டி என 5 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக காலை மற்றும்மாலை நேரங்களில் சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு 30 நிமிடங்களுக்கும் மேலாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், இந்த பகுதிகள் சென்னை மாநகராட்சியின் உட்பகுதியில் வருவதால், மேற்கண்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் உறுதி
இதுதொடர்பாக திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது:
மாநகராட்சியின் எல்லைக்குள் எங்கேயும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பது இல்லை. ஆனால், தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னை மாநகராட்சியின் ராஜீவ்காந்தி சாலையில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக அவ்வப்போது கட்டணத்தை உயர்த்திவருகின்றனர். கூடுதல் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதிப்படுவதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மத்திய அரசு இதில்தலையிட்டு, அங்குள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை போக்குவரத்துத் துறைஅமைச்சரிடம் வலியுறுத்தியுள் ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.