தமிழகம்

இஸ்ரோ திட்ட இயக்குநருக்கு அப்துல்கலாம் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்

செய்திப்பிரிவு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு இவ்வாண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட டாக்டர் அப்துல்கலாம் விருதினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

நாட்டின் 69-வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு இவ்வாண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட டாக்டர் அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், 5 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி அப்துல்கலாம் பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த விருது முதன்முதலாக (இஸ்ரோ) திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிமணிக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான தங்கப் பதக்கம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT