நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும்விடுபட்ட ஊரக உள்ளாட்சிதேர்தலுக்கான வாக்குச்சாவடிகளைக் கண்டறியவும், வரைவுவாக்காளர் பட்டியலை தயாரித்துவெளியிடும்படியும் மாவட்ட ஆட்சியர்களை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்சென்னை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனவரிமாதம் மறைமுகத் தேர்தலும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே, 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள்தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முடிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டுகள் தொடர்பான அறிவிக்கைகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 27 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையருடன் மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி காணொலியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளைக் கண்டறிவது, அவை குறித்த பதிவுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் பிப்.14-ம் தேதி தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலையே மாநில தேர்தல் ஆணையமும் பயன்படுத்துவதால், பிப்.14-ம் தேதி வெளியிடப்படும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.
இதுதவிர, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவாக வரைவு வாக்காளர் பட்டியலைத் தயாரித்து, வெளியிட்டு அவை தொடர்பான வாக்காளர்களின் கோரிக்கைகளை பெற்று நிவர்த்தி செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் இருந்து செலவுக் கணக்கை பெற்று அவற்றை சரிபார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு எதிர்மனுக்களை உடனடியாக தாக்கல் செய்வது மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல்தொடர்பான புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்வது குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவுரைகள் வழங்கினார்.
இக் கூட்டத்தில் மாநில தேர்தல்ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.