கடந்த 2019 அக்டோபர் மாதம் திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் சுவரில் துளையிட்டு 28 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டன. இந்த வழக்கில் திருச்சி மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதையடுத்து, திருவாரூரை சேர்ந்த கொள்ளையன் முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், பெங்களூரு சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இவர் மீது தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரித்த பிறகு, மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை அண்ணா நகரில் கடந்த 2017-ம் ஆண்டு 17 வீடுகளில் அடுத்தடுத்து நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த வழக்குகளில் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் மட்டும் சிக்கினர். 100 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகன் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள முருகனை நீதிமன்ற அனுமதியுடன் அண்ணா நகர் போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் பதுக்கி வைத்திருந்த மேலும் ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.