நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் படப்பிடிப்புத் தளத்தில் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், போராட்டம் நடத்தியவர்களுக்கு அறிவுரை கூறினார்.
சென்னையில் வேளாண் நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பலவேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் ரஜினியுடன் கூட்டணியா என்கிற கேள்விக்கும், தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம், இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழகம் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறை, கிருஷ்ணா கோதாவரி இணைப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அப்போது வருமான வரி சோதனை குறித்த கேள்வி வந்தது. வருமான வரித்துறை ரெய்டு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு, ''அது குறித்து நான் என்ன சொல்ல முடியும்? அது வருமான வரித்துறையின் நடவடிக்கை'' என ராமதாஸ் கூறினார்.
வருமான வரித்துறையின் சோதனை முடிந்த பின்னர் படப்பிடிப்புத் தளத்துக்குப் போய் பாஜகவினர், விஜய்க்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்களே என்கிற கேள்விக்கு, “இப்போதுள்ள காலகட்டத்தில் பொதுவாக இம்மாதிரியான போக்கு உள்ளது. தமிழ்நாட்டைப் பற்றி சொல்வதென்றால் அமைதிப் பூங்கா என்பார்கள்.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் இப்போது எடுத்ததற்கெல்லாம் போராட்டம், தேவையற்ற போராட்டம் நடக்கிறது. இப்படி நான் பலவற்றைச் சொல்லலாம். ஆனால், சிலவற்றைச் சொல்ல முடியாது. அதனால் அப்படி இல்லாமல் மக்கள் பிரச்சினை சார்ந்த மக்களுக்குத் தேவையான விஷயங்களுக்காகப் போராடலாம்” என்று ராமதாஸ் பதிலளித்தார்.
தவறவிடாதீர்!