அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது நாளான இன்றும் நடைபெற்றது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் அமைப்பு ரீதியாக 56 மாவட்டக் கழகங்களாகச் செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பு முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது.
இரண்டாம் நாளான இன்று (பிப்.11) காலை திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றிய நிர்வாகிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, வரவிருக்கும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கட்சி பலவீனமாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கவும் முதல்வரும் துணை முதல்வரும் அறிவுரை வழங்கினர்.
அதேபோன்று, அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இன்று மாலையில் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, கடலூர் கிழக்கு, மத்தியம், மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தவறவிடாதீர்