சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 118 அடி உயர பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் நாளை (12-ம் தேதி) கொடி ஏற்றுகிறார்.
இதையொட்டி அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம் ரசிகர் மன்றத்துக்கு கொடிவேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று, சிவப்பு, மஞ்சள், கருப்பு என்ற மூவர்ணத்துடன் நீலநிறத்தில் ஜோதியை கையில் ஏந்திய நம் கொடியை கடந்த2000-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அறிமுகம் செய்தோம்.
2005-ல் நமது ரசிகர் மன்றம், தேமுதிகவாக மாறியபோது, ரசிகர் மன்றக் கொடியை கட்சிக் கொடியாக மாற்றினோம்.
கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ வெற்றி, தோல்விகள், சோதனைகளை சந்தித்தபோதும், எதற்கும் மனம் தளராத என் படை தளபதிகளாக இருப்பவர்களே என்னுடன் பக்கபலமாக உள்ளனர்.
இனி வரும் காலத்திலும் லஞ்ச, ஊழலற்ற, நேர்மையான, தைரியமான, அனைவருக்கும் சமமான வாழ்வு அளிக்கும் நம்தமிழகத்தை உருவாக்க வீறுநடை போடுவோம். எந்த நோக்கத்துக்காக நம் கொடி அறிமுகம் செய்யப்பட்டதோ, நம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த இலக்கை அடைய நாம் அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம் என உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.