விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் பிரதமர் விவசாய ஆதரவு நிதித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 69 ஆயிரம் விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 443 கோடியே 61 லட்சம் வழங்கிதமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் மற்றும் விளைபொருட்களுக்கு போதிய விலையின்மை போன்றவற்றால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, பயிர் சாகுபடி செய்து பயன்பெறுவதற்காக அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்வழங்கும் பிரதமர் விவசாய ஆதரவு நிதித் திட்டத்தை கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
தொடக்கத்தில் சிறு, குறுவிவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், பின்னர் அனைத்துவிவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என்று 3 தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேளாண் புள்ளியல் ஓர்கண்ணோட்டம் 2018-ன்படி, தமிழகத்தில் இதுவரை 37 லட்சத்து 25 ஆயிரம் தகுதிவாய்ந்த பண்ணைக் குடும்பங்கள் கணக்கிடப்பட்டு, மத்திய அரசின் பிரதம மந்திரி கிஸான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் அதிகரிப்பு
இதில் 34 லட்சத்து 69 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 443 கோடியே 61 லட்சம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 98 சதவீதம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கி சாதனை புரிந்துள்ளது.
மேலும், 2012-13-ம் ஆண்டு முதல் இதுவரை ஏற்பட்டுள்ள மரபு மாற்றத்தால் விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 38 லட்சமாக அதிகரித்துள்ளது.
தற்போது, விடுபட்ட தகுதியான பண்ணைக் குடும்பங்களை இத்திட்டத்தின்கீழ் சேர்க்க அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், 1 லட்சத்து 79 ஆயிரம் விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்துள்ளனர்.
உழவன் செயலியில் வசதி
இதற்கிடையே, இத்திட்டத்தில் புதிய விவசாயிகள் பதிவு செய்வதற்கும், நான்காவது தவணை பெறாத விவசாயிகள் அவர்களது ஆதார் அட்டையில் உள்ளபடி பெயரைத் திருத்தம் செய்வதற்கும் அரசின் ‘உழவன்’ செயலியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில் இத்திட்டம் தொடங்கி ஓராண்டுக்கு உள்ளாகவே அதிக விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கியதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
இவ்வாறு அதிகாரி தெரி வித்தார்.