திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இதில் திமுக உள்கட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 17-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். திமுக உள்கட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
திமுகவில் கிளைச் செயலாளர் முதல் தலைவர் வரையிலான உள்கட்சித் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கிளை, ஒன்றியம், பேரூர், நகர், வட்டம், பகுதி, மாநகர், மாவட்டச் செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, தணிக்கை குழு உறுப்பினர்கள், பொருளாளர், பொதுச்செயலாளர், தலைவர் என்று திமுக உள்கட்சித் தேர்தல் ஓராண்டு காலத்துக்கு மேலாக நடைபெறும். கட்சியின் 14-வது உள்கட்சித் தேர்தல் கடந்த 2012-13-ல் நடந்தது.
தற்போது உறுப்பினர் சேர்க்கை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில் திமுகவின் 15-வது உள்கட்சித் தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். முதல்கட்டமாக கிளை அமைப்புகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து பேரூராட்சி, மாநகர வட்டங்களுக்கும், பின்னர் ஒன்றிய, நகர, மாநகரப் பகுதிகளுக்கும், அதன் தொடர்ச்சியாக மாநகர அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.
உள்கட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும், வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சி தயாராகி வரும் நிலையில் அதற்கு தொய்வில்லாமல் உள்கட்சித் தேர்தலை நடத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.