தமிழகம்

அர்விந்த் கேஜ்ரிவால் ஏப்.11-ல் தமிழகம் வருகை: சென்னை, கோவையில் பேசுகிறார்

கி.ஜெயப்பிரகாஷ்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் 11-ம் தேதி அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தமிழகம் வருகிறார்.

சென்னையில் பொதுக் கூட்டத்திலும், கோவையில் திறந்தவெளி பிரச்சாரத்திலும் ஈடுபடவுள்ளார்.

தமிழகத்தில் 16-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 24-ம் தேதி நடக்கிறது. அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும், இடதுசாரிகள் தனியாகவும் இந்த தேர்தலை சந்திக்கவுள்ளன. இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிடவுள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின் கூறியதாவது:

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். எங்களுக்கு பல்வேறு சமூக இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 40 தொகுதிகளில் இருந்து போட்டியிட 500க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளனர். 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். ஊழலை ஒழிக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் 11-ம் தேதி தமிழகம் வருகிறார். 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் இங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். சென்னையில் பொதுக் கூட்டத்திலும், கோவையில் திறந்தவெளி பிரச்சாரத்திலும் ஈடுபடவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT