திருவள்ளூர் அருகே பிறந்த நாள் விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞரையும், அவரது நண்பரையும் கைது செய்த போலீஸார் மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் அஜித்குமார் (23). இவருக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து இவரது நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் பிறந்த நாளைக் கொண்டாட முடிவெடுத்து கேக் ஆர்டர் செய்தனர். கிராமத்தில் பொதுமக்கள் செல்லும் சாலை நடுவே கேக்கை வைத்து பெரிய பட்டாக்கத்தியால் அஜித்குமார் வெட்டினார். பின்னர் நண்பர்கள் அனைவரும் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டனர்.
இதுகுறித்து அவ்வழியாகச் சென்ற சிலர், அஜித்குமார் மற்றும் கலைவாணன் ஆகிய 2 பேரிடம், பொது இடத்தை வழிமறித்து இப்படி கத்தியுடன் ஆட்டம் போடலாமா? என்று கேட்டனர். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அஜித்குமாரும் கலைவாணனும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பொதுமக்களிடம் பேசியதாக காவல்துறைக்குப் புகார் சென்றது.
இதையடுத்து கல்லூரி மாணவன் நரேன், அஜித்குமார், கலைவாணன், விஜய், பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீது புல்லரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இதில் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய அஜித்குமார், அவரது நண்பர் கலைவாணன் ஆகிய இருவரும் சிக்கினர்.
அவர்கள் 2 பேர் மீது கொலை மிரட்டல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார் ரவுடி பினு. அவர் சிக்கியதும் அல்லாமல் பெரும் ரவுடிப் பட்டாளமே சிக்கியது. இதைத் தொடர்ந்து பலரும் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேட்டில் திருமணத்தின்போது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கைதானார். பின்னர் புதுமாப்பிள்ளை என்பதால் போலீஸார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
இதுபோன்ற விஷயங்களில் போலீஸார் தொடர்ச்சியாகக் கைது செய்வதும், பத்திரிகைகளில், காட்சி ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அறிந்த பின்னரும் மீண்டும் மீண்டும் சிலர் இதே தவறைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!