மூலவைகையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் அதன் கரைகளில் உள்ள பல தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் நீர்வரத்து காலங்களில் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் நீர் புகும்நிலை உள்ளது. எனவே இவற்றை விரைவில் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வருசநாடு. இங்குள்ள வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழை சிற்றாறுகளாக உருவாகிறது. பின்பு இந்த நீர் மூலவைகையாக பெருக்கெடுத்து வைகைஅணைக்குச் செல்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் போதுமான மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு 3 மாதங்களுக்கு மேல் இந்த ஆற்றில் நீர் பெருக்கு இருந்தது.
இந்த காட்டாற்று வெள்ளம் பக்கவாட்டில் சென்று விடாமல் இருக்க ஆங்காங்கே கரைகளில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளன.
மயிலாடும்பாறை அருகே இந்திராநகர், அய்யனார்கோயில், பெருமாள்கோயில், கடமலைக்குண்டு வனஅலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதுபோன்ற நீர்தடுப்புச் சுவர்கள் உள்ளன.
கடந்த2 மாதங்களுக்கு முன்பு பெய்த காட்டாற்று வெள்ளத்தில் இந்த சுவர் இடிந்ததுடன் பல இடங்களிலும் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டது.
இதனால் அடுத்து ஆற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது.
இது குறித்து மயிலாடும் பாறையைச் சேர்ந்த வேல்முருகன் கூறுகையில், மயிலாடும்பாறை இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வசித்து வருகின்றனர். ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளதால் காட்டாற்று வெள்ளத்தின் போது நீர் இப்பகுதிக்கு வந்து விடும். இதனால் இங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. சமீபத்தில் வந்த வெள்ளத்தில் இந்த சுவர் இடிந்துவிட்டது. எனவே நீர்வரத்து இல்லாத இந்த நேரத்திலே இவற்றை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
மூலவைகை ஆற்றைப் பொறுத்தளவில் காட்டாற்று வெள்ளம் வரும் போது கரைகள் வெகுவாய் அரிக்கப்படுகிறது. இதனால் ஆற்றின் அகலம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மழைநேரங்களில் கரைகளை உடைத்துக்கொண்டு நீர் வெளியேறும் நிலையும் உள்ளது. எனவே இப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்துடனே வாழ வேண்டியதுள்ளது.
எனவே தடுப்புச்சுவர் உடைந்த பகுதிகளை ஆய்வு செய்து அவற்றை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கரையோர கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.