ரயில் பயணிகளின் வசதிகள், பாதுகாப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆண்டுதோறும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்ட ரயில் பயணிகளின் ஆலோசனை குழுவின் (டிஆர்யுசிசி) 143வது கூட்டம் சென்னையில் கடந்த 21-ம் தேதியன்று நடந்தது. இதில், ஆலோசனை குழு உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு ரயில்வே மூத்த அதிகாரி பி.ரவிசந்தர் வரவேற்புரை ஆற்றினார். தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மண்டல மேலாளர் அனுபம்சர்மா தற்போது நடைபெற்று வரும் ரயில் பணிகள், தூய்மைத் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் ரயில்கள் நிறுத்தம், கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், நடைமேம்பாலங்கள் அமைத்தல், கூடுதலாக முன்பதிவு மையங்கள் திறப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.