பழங்குடி மக்கள் போராட்டம். 
தமிழகம்

ஆனைமலையில் புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி பழங்குடி மக்கள் காத்திருப்புப் போராட்டம்

எஸ்.கோபு

ஆனைமலையில் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என, பழங்குடி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி, கூமாட்டி, எருமைப் பாறை, நாகரூத்து, சின்னார் பதி, கீழ் பூனாட்சி, வெள்ளி முடி, காடம்பாறை, வில்லோனி நெடுங்குன்று, கவர்க்கல், கல்லாறு, உடுமன் பாறை, சங்கரன் குடி, பாலகனாறு, ஈத்த குழி ஆகிய வனக் கிராமங்களில் மின்சார வசதி, அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், நாகரூத்து-2 வனக் குடியிருப்பில் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 23 வீடுகளை இழந்த பழங்குடியின மக்கள், கடந்த 7 மாதங்களாக பிளாஸ்டிக் டெண்ட்டில் உருவாக்கப்பட்ட குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

வனத்தின் பூர்வீகக் குடிமக்களான பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடமும் புதிய வீடுகளும் அமைத்துத் தர வேண்டும் என, வன உரிமைச் சட்டப்படி அனுபவ நிலப்பட்டா கேட்டு பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.10) கூமாட்டி, நாகரூத்து, சின்னாறு பதி , எருமைப் பாறை, வெள்ளி முடி உள்ளிட்ட வனகிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் காலை முதல் பொள்ளாச்சி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT