அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசப்படுகிறது.
கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தவிர மாவட்ட வாரியாக நடத்தப்படும்போது அம்மாவட்ட அமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்கின்றனர்.
இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை காலை மற்றும் மாலை இருவேளைகளில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. தினமும் 15-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள், அடுத்தகட்ட வேலைகள், மாநகராட்சி, நகராட்சித் தேர்தலை எதிர்கொள்வது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது.
இன்று காலையில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாலையில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி புறகர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடக்க உள்ளது. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்த மாவட்டங்களில் கட்சியை மேலும் விரைவுபடுத்தவும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது.
தவறவிடாதீர்!