திருப்பத்தூர் அருகே ஆடுகளை வேட்டையாடி கொன்றது சிறுத்தை அல்ல நரி என வனத்துறையினர் வெளியிட்ட படம் நரியின் படம் அல்ல, அது வீட்டில் வளர்க்கும் நாய் என ஆதாரத்துடன் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து காயப்படுத்தி வந்தது. கடந்த வாரம் காமராஜ புரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 2 ஆடுகளை மர்ம விலங்கு அடித்துக்கொன்றது. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன.
இதனால் பீதியடைந்த கிராம மக்கள் சிறுத்தைதான் ஆடுகளை கடித்து காயப்படுத்தி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருப்பத்தூர் வனச்சரகர் சோழராஜன் தலைமையில் வனக்காவலர்கள் நேரில் ஆய்வு செய்ததுடன் மர்ம விலங்கின் கால் தடங்களையும் ஆய்வு செய்தனர். மேலும், மர்ம விலங்கின் நடமாட்டம் தொடர்பாக ஒரு சில இடங்களில் இரவு நேரத்தில் படம் பிடிக்கக்கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.
காமராஜபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் அருகில் பொருத்தப்பட்ட கேமராவில் நேற்று முன்தினம் இரவு நரியின் நடமாட்டம் பதிவாகியிருந்தது. இந்த புகைப்படத்தை ஆதாரமாக காண்பித்து காமராஜபுரம் கிராமத் தில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என வனத்துறையினர் தெரி வித்தனர்.
மேலும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், நரி தான் இரவு நேரங்களில் ஆடு களை வேட்டையாடி கொன்றதாக கூறி சிறுத்தை பீதிக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
இந்நிலையில், வனத் துறையினர் வெளியிட்ட படத்தை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அதிர்ச்சி யடைந்தனர். வனத்துறையினர் வெளியிட்ட படம் நரி அல்ல அது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் வளர்க்கும் நாய். இரவு நேரத்தில் வெளியே சுற்றித்திரிந்த போது கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் தோற்றம் நரியைபோல் உள்ளதால் வனத் துறையினர் அது நரி என தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து காமராஜ புரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது, ‘‘கடந்த சில நாட்களுக்கு முன்பு மிளகாய் தோப்பு வழியாக பொதுமக்கள் சிலர் இரவு நேரத்தில் சென்ற போது, அங்கு இரண்டரை அடி நீளம், ஒன்றரை அடி உயரத்தில் கருப்பு நிறத்தில் ஒரு விலங்கை பார்த்துள்ளனர். மனித சத்தத்தை கேட்ட விலங்கு வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டது. இந்த விலங்கு தான் ஆடுகளை அடித்துக் கொன்று இருக்க வேண்டும்.
ஆனால், மர்ம விலங்கு எது என கண்டுபிடிக்க முடியாத நிலையில் கேமராவில் பதிவான நாய் படத்தை வெளியிட்டு சிறுத்தை நடமாட்டம் இல்லை என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்க முயற்சி செய்யும் வனத்துறை யினர் விலங்குகளிடம் இருந்து பொது மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கையாக உள்ளது. எனவே, இனியும் காலம் கடத்தாமல் ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு எது என்பதை கண் டறிய வனத்துறையினர் முயற்சி எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காமராஜபுரம் பகுதியில் இரவு நேரத்தில் வந்தது நரி தான், சிறுத் தையும் அல்ல மர்ம விலங்கும் அல்ல’’ என திட்டவட்டமாக கூறினர்.