ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு நிலாச்சோறு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பெண்கள் விடிய விடிய கும்மியடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தைப்பூசத்துக்கு 5 நாட்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு திருவிழா நடைப்பெறுவது வழக்கம். முதல் நான்கு நாட்கள் நாள்தோறும் இரவில் கிராமப்புற பெண்கள் ஒன்றுகூடி முக்கிய இடத்தில் கும்மியடித்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
5-வது நாள் இரவில் திருமண நிகழ்ச்சி போல் விழா நடைபெறும். இதன்படி நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் சென்னிமலை, மொடக்குறிச்சி, அந்தியூர், பவானி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலாச்சோறு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கைக்காட்டிவலசு திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி நிலாச்சோறு திருவிழாவை நடத்தினர். மேலும், விடிய விடிய கும்மியடித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், இந்த திருவிழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிக்கும், மும்மாரி மழை பெய்யும் என்பது ஐதீகம். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி ஒற்றுமையை வலியுறுத்தி நிலாச்சோறு விழா நடத்தப்படுகிறது, என்றனர்.