கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து சேலம் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் சாதாரணமாக சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுத்தக் கூடிய ஒருவகை கிருமி. இது 7 வகைப்படும். இதில், தற்போது சைனாவில் ஹுபே/வூகான் மாகாணத்தில் நோவல் கரோனா வைரஸ் நோய் பரவியுள்ளது.
இவ்வைரஸ் மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு மூச்சுக்காற்று மூலம் 20 சதவீதமும், இருமல், தும்மல் மற்றும் பேசும்போது வெளிப்படுகின்ற நீர்திவலைகள் மூலம் 80 சதவீதமும் பரவுகிறது. இந்நீர்திவாலைகளில் 48 மணி நேரம் வரை வைரஸ் உயிரோடு இருக்கும். இந்நீர் திவாலைகளை கைகளால் தொடுவதன் மூலம் வைரஸ் பரவி அவர்களின் மூக்கு மற்றும் கண்களை தொடுவதன் மூலமாக நோய் தொற்று ஏற்படுகிறது.
மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்கள், பேருந்துகள், ரயில்கள், மற்றும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்
பொதுமக்களுக்கு கை கழுவும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தினமும் 15 முதல் 20 முறை கை கழுவுவதின் அவசியத்தை அறிவுறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவகல்லூரி மருத்துவ மனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணி தினமும் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 படுக்கைகள் கொண்ட வார்டு தனியாக தயார் நிலையிலும், அனைத்து தேவையான உபகரணங்களும், என் 95, ட்ரிபில் லேயர் மாஸ்குகள் மற்றும் செயற்கை சுவாச கருவிகளும் தேவையான அளவில் தயார் நிலையில் உள்ளது.
சேலம் காமலாபுரம் விமானநிலையத்தில் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டும், பேனர்கள், போஸ்டர்கள் பொது இடங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி 26-ம் தேதி முதல் சீனா சென்று விட்டு சொந்த ஊரான சேலம் திரும்பியவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அனைத்து பயணிகளும் அவரவர் வீடுகளிலேயே 14 முதல் 28 நாட்கள் தானாகவே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக தினமும் நோய் அறிகுறிகள் உள்ளனவா என கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இளநீர், ஓஆர்எஸ், கஞ்சி போன்ற நீர் சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும்.
மேலும், உதவி மையம் 104, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், சேலம்- 0427-2450023, 0427-2450022 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.