தமிழகம்

இருசக்கர வாகனத்தின் டயர் கழன்று ஓடியதால் விபத்து: வாகன விற்பனை நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

செய்திப்பிரிவு

இருசக்கர வாகனத்தின் பின்புற டயர் கழன்று ஓடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென, வாகன விற்பனை நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை சென்னனூரைச் சேர்ந்த டி.திவ்யா, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2016 பிப்ரவரி 25-ம் தேதி,கோவை - அவிநாசி சாலையிலுள்ள ஷோரூமில் இருந்து சுசூகி நிறுவன ஸ்கூட்டரை வாங்கினேன். பின்னர், மே 6-ம் தேதி இலவச சர்வீஸூக்காக வாங்கிய ஷோரூமிலேயே வாகனத்தை ஒப்படைத்தேன். மே9-ம் தேதி வாகனத்தை என்னிடம் திரும்ப ஒப்படைத்தனர். 11-ம்தேதி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்புறசக்கரம் கழன்றுவிட்டது. வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தேன்.

இதுதொடர்பாக வாகன ஷோரூமை தொடர்புகொண்டு கேட்டபோது, பின்புற சக்கரத்தில் உள்ள நட் சரியாக பொருத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு தருவதாகவும் தெரிவித்தனர். அதன்பிறகு கண்டுகொள்ள வில்லை.

இதையடுத்து, வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும் சரிவர பதில் அளிக்கவில்லை. எனவே, எனது வாகனத்தை மாற்றித்தரவும், மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், வாகன விற்பனை நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் ஆர்.டி.பிரபாகர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

வாகனத்தின் பின்புற சக்கர நட் சரியாக பொருத்தப்படாததால், விபத்து ஏற்பட்டுள்ளதை வாகன விற்பனை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. வாகன தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை. எனவே, வாகனத்தை மாற்றித் தர உத்தரவிட முடியாது. சக்கரம் கழன்று ஓடியதால் ஏற்பட்ட விபத்தில், மனுதாரருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரத்தை வாகன விற்பனை நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT