தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அயன்புரம் நாடார் உறவின் முறை சங்கத்தின் 70-வது ஆண்டு விழா, சென்னை அயனாவரத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர்டி.பாண்டியராஜன், பொதுச்செயலாளர் வி.ஏ.பிரபாகரன், பொருளாளர் பாஸ்கர், மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் எஸ்.ஜெயச்சந்திரன், பாஜக நிர்வாகி ம.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் தமிழிசை பேசியதாவது: எவ்வளவு சாதாரணமான வராக இருந்தாலும் உழைத்தால் மிக உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதற்கு நானே உதாரணம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. உழைத்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மாணவ, மாணவிகளிடம் கூறி வருகிறேன்.
காமராஜரால் ஈர்க்கப்பட்டே அரசியலுக்கு வந்தேன். மக்கள் தலைவராக இருந்த அவரே எனது வழிகாட்டி. தெலங்கானா ஆளுநராக இருந்தாலும் தமிழகத்தில் நடக்கும் நிகழ்வு களை கவனித்து வருகிறேன். ஒரு ஆளுநராக தெலங்கானா மாநில மக்களின் வளர்ச்சிக்கும் பணியாற்றி வருகிறேன். அதுபோல தமிழகத்தின் வளர்ச்சியிலும் எனது பங்களிப்பு இருக்கும். தமிழகத்தில் நான் கற்றதும், பெற்றதும்தான் தெலங்கானாவில் பணியாற்ற துணையாக உள்ளது.