தமிழகம்

கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை தொடர்ந்து இறங்குமுகம்

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் பெரியவெங்காய உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இம்மாநிலங்களில் கடந்த ஆண்டு பெய்த பருவம் தவறிய மழை, அதிகனமழை காரணமாக பெரிய வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் அதன் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.

தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை உயர்வைத் தொடர்ந்து,அதற்கு மாற்றாக சாம்பார் வெங்காயம் பயன்பாடு அதிகரித்த நிலையில், கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் மட்டுமல்லாது, சாம்பார் வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.200 வரை உயர்ந்தது. இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த எகிப்து போன்றநாடுகளில் இருந்து மத்திய அரசு அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்ததைத் தொடர்ந்து அதன் விலை குறையத் தொடங்கியது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்குவெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் சாம்பார் வெங்காய வரத்தும் கோயம்பேடு சந்தையில் அதிகரித்துள்ளது. இவை காரணமாக இரு வெங்காயங்களின் விலையும் இச்சந்தையில் தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.37 வரை விற்கப்பட்ட நிலையில், நேற்று கிலோ ரூ.25 ஆக குறைந்திருந்தது. மேலும் கடந்த வாரம் ரூ.50-க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான தக்காளிரூ.12, கத்தரிக்காய், பீன்ஸ், புடலங்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு, கேரட் தலா ரூ.25, அவரைக்காய், பாகற்காய் தலா ரூ.15, முட்டைக்கோஸ், பீட்ரூட், முள்ளங்கி ஆகியவை தலா ரூ.10, முருங்கைக்காய் ரூ.100, பச்சை மிளகாய் ரூ.8 என விற்கப்பட்டு வருகின்றன.

பெரிய வெங்காயம் மற்றும்சாம்பார் வெங்காயம் ஆகியவற்றின் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வெங்காய வியாபாரிகள் கூறும்போது,

‘‘தற்போது பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. அதனால் அவற்றின் விலை குறைந்து வருகிறது. மேலும் குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT