தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ள 118 அடி உயர பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் வரும் 12-ம்தேதி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கொடி ஏற்றுகிறார்.
தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகின்றன. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் 114 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நினைவுபடுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் 150 அடிஉயர காங்கிரஸ் கொடிக் கம்பம்அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் மிக உயரமான கொடிக் கம்பங்களை அமைத்துள்ளன.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 118 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கொடிக் கம்பத்தை நிறுவதற்கான பணி தொடங்கியுள்ளது. மொத்தம் 3 டன் எடை கொண்ட இந்த கொடிக் கம்பம் சுமார் ரூ.10 லட்சம்செலவில் தயாராகிறது. தேமுதிகவின் 20-ம் ஆண்டு கொடி அறிமுக நாள் விழா வரும் 12-ம் தேதி நடக்கிறது. அன்று, இந்த கொடிக் கம்பத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைக்கிறார்.
கொடி அறிமுக நாளையொட்டி விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தேமுதிக 20-ம் ஆண்டு கொடி நாள் விழா வரும் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடக்கும் விழாவில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொடி நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.