அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி சென்னையில் வரும் 13-ம்தேதி போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம்தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற னர். 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகத்திடம் மனு அளித்தும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே, தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 8 தொழிற்சங்கள் பங்கேற்றன. இதில் ஊதியப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறியதாவது: போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம். ஆனால், இதுவரையில் நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே, இதை கண்டித்து சென்னையில் வரும் 13-ம் தேதியிலும் பிற மாவட்டங்களில் இன்றும் (10-ம் தேதி) போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சில சலுகைககளையும் ஓய்வுபெற்ற மற்றும் தற்போதுபணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையும் உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.