தமிழகம்

உலகளவில் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் கருமந்தி குரங்குகள்: வேகமாக அழிவதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சர்வதேச அளவில் தென்னிந் தியாவில் மட்டுமே காணப்படும் அரியவகை கருமந்தி குரங்குகள், வேகமாக வேட்டையாடப்படுவதால் அழிவின் விளிம்பில் உள்ளதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

வனவிலங்குகளில் குரங்குகள் அறிவுத்திறன் மிக்கவை. குரங் கினங்கள் வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலங்கள் மிகுதியான அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளை வாழ்விடமாகக் கொண்டவை. இவை 56 மில்லி யன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமியில் வாழ்வதாக ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர். குரங்கினத்தில் உலகளவில் 260 முதல் 300 வகை சிற்றினங்கள் உள்ளன.

இவற்றில் கருமந்தி எனும் குரங்கானது தனிச்சிறப்பு மிக்கவை. இவை உலகளவில் இந்தியாவில் மட்டுமே உள்ளன. இந்தியாவில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநில மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் மட்டுமே அதிகமாக காணப்படுகின்றன. இவற்றை தமிழில் கருமந்தி எனவும், மலையாளத்தில் கரிங்கொரங்கு எனவும் அழைக்கின்றனர். இவை தற்போது அழிந்துவரும் குரங்கினமாக மாறியுள்ளன.

இதுகுறித்து திண்டுக்கல் வன ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ராமசுப்பு `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

கருமந்தியில் ஆண் குரங்குகள் 80 செ.மீ. உயரத்தில் 9 முதல் 15 கிலோ எடை வரை வளரும். பெண் குரங்குகள் 60 செ.மீ. உயரத்தில் 11 கிலோ எடை முதல் 12 கிலோ வரை வளரக்கூடியவை. இவை அகலமான இலைகளையுடைய மரங்களைக் கொண்ட காடுகளில் குறிப்பாக சோலைக்காடுகளில் வசிக்கும். கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரம் உள்ள காடுகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. தற்போது காடுகளின் அழிவால் இலையுதிர் காடுகள், தேக்குமரத் தோட்டங்கள் மற்றும் நறுமணத் தோட்டங்களையும் இவை புகலி டமாக அடையத் தொடங்கிவிட்டன.

இவ்வகை குரங்கினங்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்களைக் கொண்ட 10 முதல் 20 வகையான குழுக்களாக வாழ்கின்றன. மரங்களின் மிக உயரமான கிளைகளில் ஆண் குரங்குகளும், அதன் கீழ் பெண் குரங்குகளும் இரவு நேரங்களை செலவிடுகின்றன. மரங்களின் இளந்தளிர்கள், பூ மொட்டுகள், விதைகள், பட்டைகள் மற்றும் மரத்தண்டுகள் ஆகியவற்றை உணவாக உண்ணுகின்றன.

மற்ற குரங்குகளைக் காட்டிலும் இவ்வகை குரங்கினங்களில் இனப்பெருக்கத்திறன் குறைவு. ஆண்டில் இரு பருவத்தில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து ஒரே ஒரு குட்டியை மட்டும் ஈனுகின்றன. இவை பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினால் அறிவிக்கப்பட்ட மிகவும் அழிந்துவரும் 25 குரங்கினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இக்குரங்கினம் ஏறத்தாழ 50,000 முதல் 1 லட்சம் வரை இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆனால், உண்மையில் இவற்றின் எண்ணிக்கை 5000-க்கும் குறைவாகவே உள்ளன. இவை காடுகளில் அரியவகை மரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவுவதாக சூழ்நிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்’’ என்று அவர் கூறினார்.

பன்னாட்டு சந்தையில் விற்பனைக்குத் தடை

பேராசிரியர் ராமசுப்பு மேலும் கூறியதாவது: “பண்டைய காலம் தொட்டு இவை அதிகமாக வேட்டையாடப்பட்டு, இவற்றின் தோல், பெல்ட் மற்றும் மத்தளங்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் இதன் ரத்தம், சதைப்பகுதி மற்றும் இதயப் பகுதிகள் பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அழிவின் விளிம்பில் உள்ளதால் பன்னாட்டு சந்தைகளில் கருமந்தி குரங்குகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT