‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக பவித்ரா என்ற பெண் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதுகுறித்து சிலரது கருத்துகளுடன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தி வெளி யிட்டது. அச்செய்தி நீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கிடைக்கப் பெறுவதற்கு முன்பே, ஜூலை 25-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் முதல் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பவித்ரா வழக்கு விசாரணை யைப் பொறுத்தவரை அவரை நாங்கள் ஒருபோதும் மரியாதைக் குறைவாக நடத்தவில்லை. அவரை குடும்ப உறுப்பினராகவே பாவித்தோம். இந்த மன்றத்தில் என்ன நடந்தது என்பதை அறியாத சிலரின் கருத்துகள் பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டது முறையல்ல.
பாராட்டு
மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, வெளியீட்டாளர் என்.ராம், முதன்மை ஆசிரியர் என்.ரவி ஆகியோர் மீது தவறு இருப்பதாக நாங்கள் கருதவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உடனடியாக நாளிதழில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருப்பது சரி யான செய்கையாகும். அதற்காக நாங்கள் பாராட்டுகிறோம். மேலும், நிபந்தனையற்ற மன் னிப்பு கோரியதால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம். அதன்படி, இவ்வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.