தமிழகம்

அறிவிப்போடு நிற்காது செயல்படுத்த வேண்டும்: காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டல அறிவிப்பு குறித்து திருநாவுக்கரசர் கோரிக்கை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சேலம் தலைவாசலில் ஞாயிறன்று முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததற்கு பலதரப்பிலிருந்தும் வரவேற்பு எழுந்துள்ளன.

சேலம் தலைவாசலில் இன்று முதல்வர் பழனிசாமி கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது இதனை அறிவித்தார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தனியார் தொலைக்காட்சிக்கு கூறும்போது, “தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய எல்லா எதிர்க்கட்சிகளும்.. காங்கிரஸ், திமுக, பொதுவுடமைக் கட்சிகள் என்று அனைத்துக் கட்சிகளும் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

காவிரி டெல்டா பகுதிகளில் வாழக்கூடிய மக்கள், விவசாய அமைப்புகள் ஆகியோர் மூலம் பலநாள் போராட்டம் நடந்திருக்கிறது.

மத்திய அரசு நாங்கள் எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம் நாங்கள் நினைத்ததைச் செயல்படுத்துவோம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி அரசு அறிவிப்போடு நிறுத்தாமல் அரசாணை வெளியிட்டு சட்டமன்றத்திலும் இதனை தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசு இதை மீறி திட்டத்தை செயல்படுத்தினால் அதை எதிர்த்து செயல்படக் கூடிய முடிவோடு இருக்க வேண்டும்.

அறிவிப்பு மட்டும் பயன் தராது. முழுமையாகச் செயல்படுத்த முன் வர வேண்டும். காவிரி டெல்டாவை ஒட்டி இருக்கின்ற பிற பகுதிகளையும் இதில் சேர்த்து விவசாயம், விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை” என்றார்.

SCROLL FOR NEXT