தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தன்னாட்சி பெற்ற அமைப்பு. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த முறைகேடு தொடர்பான விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று தமிழகஅரசு விரும்புகிறது. தேர்வுகள் தொடர்பாக என்ன தவறு நடந்துள்ளது, யார் தவறு செய்துள்ளனர் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
காலில் சிக்கிய குச்சி
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர். காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவுமாறு சிறுவனை அழைத்துள்ளார். குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால், பேரன் வயதில் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்ததாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்தசெயலுக்கு அமைச்சர் வருத்தம்தெரிவித்துள்ளார். ஆனாலும், இதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தில் நடப்பாண்டு வறட்சி என்பதே கிடையாது. நல்ல மழை பெய்து, குளங்கள் நிரம்பி இருக்கின்றன.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் ஒரு பக்தி மான். அவர் கூறியவை, அவரது சொந்த கருத்துகள். அதிமுகவின் கருத்துகள் அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டால், தகுதியை எப்படித்தான் நிர்ணயம் செய்ய முடியும். மாணவரின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வு எழுதாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டால், அந்த மாணவரது தகுதிஎன்ன என்பது யாருக்கும் தெரியாமலேயே போய்விடும்.
பள்ளிகளில் இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை யாரும் கொடுக்கவில்லை. இடைநிற்றலைத் தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.