டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் எனக்கு தொடர்பிருப்பதாக கூறினால் வழக்கு தொடர்வேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தெரியவந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் குரூப்-2 தேர்விலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
தற்போது தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அத்துறையின் அமைச்சரான டி.ஜெயக்குமார் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உரிய தண்டனை பெற்றுத்தருவாரா என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சென்னையில் நடைபெற்ற மின்வாரிய பொறியாளர்கள் சங்க மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை, பதவி விலக வேண்டும், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற 3 வார்த்தைகள்தான் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.
மக்களை திசைதிருப்ப
அரசின் மீது எந்த குறையும் சொல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, மக்களை திசை திருப்புவதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றார். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால், சிபிசிஐடியிடம் ஸ்டாலின் சொல்லவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் யார் என்று ஸ்டாலின் சொல்லவேண்டும். தகவல் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் சம்மன் அனுப்பி உண்மை வரவழைக்கப்படும்.
இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு கூறி, என்னை பதவி விலகுமாறுதான் கூறினார். எனக்கு இதில் தொடர்பிருப்பதாக கூறவில்லை. தொடர்பு இருப்பதாக கூறினால் அவர் மீது வழக்கு தொடர்வேன். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.