அதிமுக வளர்ச்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கும் விதமாக கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 10-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. இக்கூட்டம் மாவட்ட வாரியாக 13-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
‘இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாநகராட்சிகளை சேர்ந்த பகுதி செயலாளர்களும் தாங்கள் சார்ந்துள்ள மாவட்டத்துக்கான தேதி மற்றும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும்’ என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
முதல் நாளான நாளை காலை கரூர், தஞ்சை வடக்கு,தெற்கு, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களுக்கும், மதியம் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்டங்களுக்கும் கூட்டம் நடைபெறுகிறது.
2020-21 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதை கருத்தில் கொண்டே, தற்போது முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் பணிகள், அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை இக்கூட்டத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.