மத்திய அரசின் என்எல்சி, என்டிபிஎல் அனல்மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கியதில், தமிழக மின்வாரியம் ரூ.5,036 கோடி நிலுவைவைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு, நெய்வேலியில் அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 1,400 மெகாவாட் மின்சாரம் தினமும் தமிழகத் துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதைத்தவிர, தூத்துக்குடி மாவட்டம், வஉசி துறைமுகம் அருகே என்எல்சி நிறுவனம்,தமிழக மின்வாரியத்துடன் இணைந்து தலா 500 மெகாவாட் திறனில் 2 அலகுகள் கொண்ட மின்நிலையத்தை அமைத்துள்ளது. இதில் இருந்தும் தமிழகத்துக்கு தினசரி 410 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வாங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணத்தை தமிழக மின்வாரியத்தால் முறையாக செலுத்த முடியவில்லை. மின்வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் 21-ம் தேதி நிலவரப்படி, என்எல்சி நிறுவனத்துக்கு ரூ.3,751 கோடியும், என்டிபிஎல் நிறுவனத்துக்கு ரூ.657 கோடியும் மின்வாரியம் நிலுவை வைத்துள்ளது. அதேபோல், என்எல்சி நிறுவனம் அமைத்துள்ள காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் மின்வாரியத்துக்கு வழங்கப்படுகிறது. இதில் சூரியசக்தி மின்சாரத்துக்கு ரூ.537 கோடியும், காற்றாலை மின்சாரத்துக்கு ரூ.91 கோடியும் நிலுவையில் உள்ளதாக தமிழக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.