பழநி தைப்பூச விழா தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரின் பின்னால் தள்ளி உதவிய கோயில் யானை கஸ்தூரி. 
தமிழகம்

பழநியில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம்: ‘அரோகரா' கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

பழநி தைப்பூச விழாவில் நேற்றுமாலை நடைபெற்ற தேரோட்டத்தில் ‘பழநி முருகனுக்கு அரோகரா’ கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத் திருவிழா, கடந்த பிப்.2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி தந்த பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, யானை, காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களிலும் உலாவரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியின் திருக்கல்யாணத்தை ஏராளமானோர் தரிசித்தனர். தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சுவாமி வீதி உலா வந்தார்.

இதையடுத்து முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலையில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளினார். தேரில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.

மாலையில் ‘பழநி முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் கிரி வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. கோயில் யானை கஸ்தூரி பக்தர்களுக்கு உதவியாக பின்னால் இருந்து தேரை தள்ளிக்கொண்டே சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் தேரில் வலம் வந்த வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமியை வழிபட்டனர்.

நான்கு தரவீதிகள் வழியே வலம் வந்த தேர் நிலையை அடைந்தவுடன், சுவாமி தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி, செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக பிப்.11-ம் தேதி இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT