தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், வடபழனி உள்ளிட்ட முருகப் பெருமான் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. மூன்றாம் படை வீடான பழநியில் தைப்பூச விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அலையலையாக பாதயாத்திரை வந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பங்குனி உத்திரம், கார்த்திகை விழா, கந்தசஷ்டி விழா, வைகாசி விசாகம் என ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் தனிச்சிறப்பாக பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற தைப்பூச விழா உள்ளது. தைப்பூச விழா கொடியேற்றத்துடன் கடந்த 2-ம் தேதி தொடங்கியது முதலே பழநி நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கினர்.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வானதை பவுர்ணமி நாளான தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அன்று முருகப்பெருமானை வழிபடுவதை சிறப்பாக கருதி பழநியில் நேற்று தைப்பூச நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். இதனால் மலைக்கோயில், ஊர்க்கோயில் எனப்படும் பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடி ஆகிய கோயில்களிலும், புனித நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம், சரவணப்பொய்கை ஆகிய பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
பழநி அடிவாரம் கிரிவீதி, சன்னதிவீதி பகுதிகளில் பக்தர்கள் பலர் காவடி எடுத்து ஆடிவந்தனர். முதுகில் அலகு குத்தி பறவை காவடி எடுத்துவந்தும், கன்னத்தில் அலகு குத்தியும் பக்தர்கள் பலர் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கே மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மலைக்கோயிலுக்கு மேலே செல்ல யானைப்பாதையும், மலையில் இருந்து கீழே இறங்க படிப்பாதையும் பயன்படுத்தப்பட்டது. இதில் மலைக்கோயிலில் இருந்து கூட்டம் இறங்கிய பின்னரே அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுப்பப்பட்டனர்.
இதனால் மலைக்கோயில் செல்ல அடிவாரத்திலேயே பக்தர்கள் ஒரு மணிநேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மலைக்கோயில் சென்றடைந்த பிறகும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணிநேரத்துக்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி நகரம் எங்கும் காவி, பச்சை ஆடைகள் அணிந்த பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பல ஊர்களில் இருந்து பல்வேறு குழுக்களாக வந்த பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்தால் பழநி நகரமே விழாக்கோலத்துடன் காணப்பட்டது.
இதேபோன்று, தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தமிழகம் முழுவதும் இருந்துவந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில்நேற்று புனித நீராடினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அஸ்திரதேவருக்கு கடலில் நீராட்டு உற்சவம் நடைபெற்றது. திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, வடபழனி உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.