இந்து, கிறிஸ்தவம் மற்றும் சுயமரியாதை திருமண முறைகளைப் பின்பற்றி திருச்செங்கோடு மணமகன் தரணிக்கும், ஸ்வீடன் மணமகள் மரியா சூசேனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. 
தமிழகம்

இந்து, கிறிஸ்தவம், சுயமரியாதை வழக்கப்படி ஸ்வீடன் பெண்ணை மணந்த தி.கோடு மணமகன்

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு மணமகனுக் கும், ஸ்வீடன் நாட்டு மணப்பெண்ணுக் கும் இந்து, கிறிஸ்தவ முறை மற்றும் சுயமரியாதை முறையில் நேற்று திருமணம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் - தமிழரசி தம்பதியரின் மகன் எஸ்.தரணி. ஸ்வீடன் நாட்டில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அந்நாட்டைச் சேர்ந்த ஜான் ஏக் பிரிஸ்ஸன் - கான் அனிதா விக்டோர்ஸ்டம் தம்பதியரின் மகளான மரியா சூசேன் என்பவரை தரணி காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில், இருவீட்டாரும் சம்மதித்தனர்.

சாதி, மத, சடங்கு சம்பிரதாய பேதங்களால் தங்கள் காதல் திருமணத்திற்கு தடைவந்து விடக் கூடாது என கருதிய மணமக்கள், இரு வீட்டார் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி, நேற்று திருச்செங்கோட்டில் மணமகன் வீட்டார் விருப்பப் படி இந்து மத வழக்கப்படியும், அவர்களது குல வழக்கப் படியும் சடங்குகள் செய்யப்பட்டு, தாலி கட்டி திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மணமகள் வீட்டார் விருப்பப் படி கிறிஸ்தவ முறையில் மோதிரம் மாற்றி மீண்டும் திருமணம் நடந்தது.

இதனிடையே மணமகன் தரணி சுயமரியாதைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், நேற்று காலை எந்த வித சடங்குகளும் இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் மாலைமாற்றி தங்கசங்கிலி மற்றும் மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் பட்டு அணிந்து இருந்ததைப் போல், ஸ்வீடன் நாட்டில் இருந்து வந்திருந்த மணமகளின் உறவினர்களும் பட்டு வேட்டி மற்றும் பட்டுப்புடவை அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT