கோவையில் ‘ஸ்டாம்ப்’ (அட்டை வில்லை) வடிவிலான போதைப் பொருளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
கஞ்சா, ஹெராயின், கோகெயின், அபின் போன்ற பல்வேறு வடிவங்களில் போதைப் பொருட்கள் இருந்தாலும், ‘எல்.எஸ்.டி ஸ்டாம்ப்’ வடிவிலான போதைப் பொருளின் பயன்பாடு சமீப காலமாக இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், குறிப்பாக கோவையில் இதன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியிருப்பது காவல்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களுடன் ஒப்பிடும் போது, ‘ஸ்டாம்ப்’ வடிவ போதைப் பொருள் வித்தியாசமானது. இதை பயன்படுத்துவதை அருகில் இருப்ப வர்களால் கூட கண்டுபிடிக்க முடியாது. ‘ஸ்டாம்ப்’ வடிவிலான போதைப்பொருட்களை கடத்தி வந்து இளைஞர்கள், இளம் பெண்கள், கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்ய முயன்றதாக சமீபத்தில் கோவையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஏறத்தாழ 25 ‘போதை ஸ்டாம்ப்’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘லைசெர்ஜிக் டை எத்திலமைடு என்ற வேதிப் பொருளை, தண்ணீரில் கரைத்து, அதை சிறிய அட்டை வில்லைகளின் பின்பகுதியில் ஊற்றி திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாற்றுகின்றனர். இந்த அட்டை வில்லையை நாக்கில் வைத்துக் கொண்டால், போதை ஏறும். அதில் உள்ள வேதிப் பொருள் கரைந்து அதிக போதையைத் தூண்டும். ஏறத்தாழ 8 முதல் 13 மணி நேரம் இந்த போதை இருக்கும்.
தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. ஒரு ‘ஸ்டாம்ப்’ வில்லையில் ஒரு மில்லி கிராம் அளவுக்கு போதைப்பொருள் இருக்கும். இது டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களிலும், கோவாவிலும் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. கோவையிலும் தற்போது ஊடுருவத் தொடங்கியுள்ளது. ‘ஸ்டாம்ப்’ வடிவ போதைப் பொருளை அதிகளவில் கோவாவில் இருந்து வாங்கி வரும் ஏஜென்டுகள், சப்-ஏஜென்டுகள் மூலம் கோவை உள்ளிட்ட இடங்களில் விற்கின்றனர்’’ என்றனர்.
இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கோவை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் வின்சென்ட் கூறியதாவது: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வரும்போது பிடிபடும் வாய்ப்புகள் அதிகம். அந்த பொருட்களின் வாசம், அளவு போன்றவையே மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். ஆனால், ‘எல்.எஸ்.டி ஸ்டாம்ப்’ வடிவ போதைப் பொருளை கடத்தி வருவது சுலபம். புத்தகங்களுக்கு இடையே வைத்துக்கூட கடத்தி விடலாம்.
இதை பொது இடங்களில் பயன் படுத்துவது இல்லை. ‘ரேவ் பார்ட்டி’ போன்ற பிரத்யேக நிகழ்ச்சிகளில் அதிகளவில் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஒரு ‘ஸ்டாம்ப்’ வடிவ போதைப் பொருளை குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கின்றனர். இதை வாங்கி வரும் நபர்கள், இன்ஸ்டாகிராம் மூலம் பிரத்யேக குழுவைத் தொடங்கி வாடிக்கையாளர்களை பிடிக்கின்றனர். அதில் நிகழ்ச்சி நடக்கும் இடம், தேதி, நேரத்தை தெரிவிக்கின்றனர். கம்ப்யூட்டர் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரிடையே இப்போதைப் பொருளின் பயன்பாடு உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் சென்னையில் 3, கோவையில் 2, தேனியில் 1 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பு தேவை
இந்த போதைப் பொருளை பயன்படுத்துவதால் நரம்புகள் பாதிக்கும். உடல் சோர்வு ஏற்படும். தினசரி 4 மணி நேரத்துக்கு புத்துணர்ச்சியற்ற நிலையில் சோர்வுடன் இருப்பர். பசி ஏற்படாது. இளம் வயதிலேயே முதுமைத் தோற்றம் வரும்.
பயன்படுத்திய பின்னர் இதை தடுப்பது கடினமானது. ‘எல்.எஸ்.டி ஸ்டாம்ப்’ போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் தங்களது மகன், மகள்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்களின் செயல்பாடு சந்தேகத்துக்குரிய முறையில் இருந்தால் உடனடியாக விசாரிக்க வேண்டும்’’ என்றார்.