மாவட்டத்தின் முக்கிய நகரமான மயிலாடு துறையில் தொழில் செய்யும் பெரும் வணிகர்கள் கேபிரியேல் என்கிற பெயரைக் கேட்டால் அலறுகிறார்கள். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய பிரபல ரவுடியான கேபிரியேல், சிறையிலிருந்தபடியே போன் மூலம் பெரும் வணிகர்களை மிரட்டி பணம் கேட்பதால் நடுக்கத்தில் உள்ளனர்.
45 வயதான கேபிரியேல் மயிலாடுதுறை ஆரோக்கிய மாதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் ஜல்லி கற்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கேபிரியேல், தனக்கு தொழில் போட்டியாக இருந்த ராஜா என்பவரை 1988-ம் ஆண்டு தனது 19-ம் வயதில் கொலை செய்து தனது கொடூர அத்தியாயத்துக்கு தொடக்கவுரை எழுதியவர்.
பிறகு காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும் சக்தியாக உருவெடுத்த மணல்மேடு சங்கருடன் சேர்ந்து, பல குற்ற சம்பவங்களுக்கு சாதுர்யமாக திட்டம் தீட்டி அவற்றை கச்சிதமாக நிறைவேற்றி சங்கரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மாறினார்.
அரசியல்வாதிகளை மிரட்டி...
மணல்மேடு சங்கர் 2007-ல் என்கவுண்டர் செய்யப்பட்ட பிறகு அந்த அணிக்கு கேபிரியேல் தலைவ ரானார். ஒரு அமைப்பின் தலை வரான பிறகு அதை நிர்வகிக் கவும், தன்னிடம் விசுவாசமாக உள்ளவர்களுக்கு செலவழிக்கவும், வழக்கு வாய்தாக்களை எதிர் கொள்ளவும் பணம் தேவையல்லவா? அதற்காக பெரும் வணிகர்கள், அரசியல் வாதிகளை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினார்.
சிறையில் இருந்தபடியே...
சிறையிலிருந்து வெளியே உள்ள தனது கூட்டாளிகளுக்கு போன் செய்யும் கேபிரியேல், குறிப்பிட்ட தொழிலதிபர்களிடம் போனை தரச் சொல்வாராம்.
அந்த தொழிலதிபரிடம், ’நான் கேபிரியேல் பேசுறேன்’ என கணீர்க் குரலில் பேச ஆரம்பித்து தனது கூட்டாளியிடம் அவர் குறிப்பிடும் தொகையை வழங்கச் சொல் வாராம்.
அப்படி வழங்காதபட்சத்தில், ‘சேர்த்த சொத்துக்களை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும்’ என மிரட்டுவாராம்.வேறுவழி தெரியாத தொழிலதிபர்கள் பேரம் பேசி எப்படியாவது பணத்தைக் கொடுத்து ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்களாம்.
சட்டமன்ற உறுப்பினருக்கு மிரட்டல்
கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் போன் மூலம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் கேபிரியேல். அவர் பணம் தர இயலாது எனக் கறாராகச் சொல்லிவிட்டு, தனது உயிருக்கு இந்த ரவுடியால் ஆபத்து இருப்ப தாக சொல்லி போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற்று நடமாடி வருகிறார்.
ஜவுளிக்கடை அதிபர் கொலை
2013-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு வ.உ.சி தெருவை சேர்ந்த ஜவுளிக் கடை, மற்றும் நிதி நிறுவன அதிபர் சுரேஷ் அவரது வீட்டுக்கு அருகே வெட்டிக் கொல்லப்பட்டார்.
இவர் கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு 10 லட்சம் ரூபாய் கேட்டு தனது அடியாள் ஒருவர் மூலம் போனில் மிரட்டியிருக்கிறார் கேபிரியேல்.அவர் கேட்ட தொகையை தருவதற்குத் தயாராக இல்லாததால், அவருடைய வீட்டுக்கு அருகிலேயே கொடூரமாக கொலையானார் சுரேஷ்.
கெஞ்சி கூத்தாடும் தொழிலதிபர்கள்
இந்த சம்பவத்துக்குப் பிறகு கேபிரியேலிடம் இருந்து போன் என தகவல் வந்தால் எப்படியாவது கெஞ்சி, கூத்தாடி, அழுது புரண்டு ‘முன்பு போல் தொழில் இப்போது சரியில்லை’ என ஏதாவது சொல்லி, தொகையை பேரம் பேசி குறைத்து கொடுத்து, பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தப்பித்து வருகின்றனர் மயிலாடுதுறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள்.
கேபிரியேல் மீது 7 கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்துறை யினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லி ராஜா கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக தற்போது சென்னை புழல் சிறையிலிருக்கும் கேபிரியேல் அங்கிருந்தபடியே போன் உத்தரவு மூலம் தனது ரவுடி ராஜ்ஜியத்தை செவ்வனே நடத்தி வருகிறார்.
கடத்தல் சம்பவம்
2006 ஜூலை 26-ம் தேதி ஒட்டுமொத்த தமிழக காவல் துறையையும் தன்னை நோக்கி திருப்பும் விதமான ஒரு கடத்தல் சம்பவத்தை கச்சிதமாக அரங்கேற்றினார் கேபிரியேல்.
திருச்சி சிறையிலிருந்து செல்வக் குமார், இம்தியாஸ் அகமது என போதைப் பொருள் கடத்தல் நபர்கள் இரண்டுபேரை கடத்தி இலங்கைக்கு தப்பிக்கச் செய்யும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது.
கைதிகள் இருவரும் புதுக்கோட்டை நீதிமன்றம் சென்றுவிட்டு பேருந்து மூலம் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு வந்துகொண்டிருந்தனர்.
கீரனூர் ரயில்வே கிராசிங் அருகே பேருந்து வந்தபோது, பேருந்தில் இருந்த ஒரு கும்பல் ஆயுதப்படைக் காவலர்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு போதைப் பொருள் நபர்கள் இருவரையும் விடுவித்து பேருந்துக்குப் பின்னால் தொடர்ந்து வந்த சுமோ வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடியிலிருந்து கள்ளத் தோணி மூலம் போதைப் பொருள் கடத்தல் நபர்கள் இம்தியாஸ், செல்வக்குமார் ஆகியோர் இலங்கைக்கு செல்ல முயன்றபோது காவல்துறையினரிடம் வசமாக சிக்கினர்.
அப்போதுதான் இந்தக் கடத்தலின் மூளையாக இருந்து செயல்பட்டவர் கேபிரியேல் என்பது அம்பலத்துக்கு வந்தது. 2013-ம் ஆண்டு ஜூலையில் நிகழ்ந்த தொழிலதிபர் சுரேஷ் கொலைக்குப் பிறகு காவல் துறையின் கெடுபிடி காரணமாக சில மாதங்கள் அடக்கி வாசித்த கேபிரியேல், இப்போது மறுபடியும் பழைய பாணியில் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்துவிட்டாராம்.
தொடரும் மிரட்டல்கள்...
சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறையிலுள்ள பிரபல நகைக் கடை அதிபருக்கு போன் மூலம் மிரட்டி பணம் பறித்துள்ளதாக மயிலாடுதுறையில் பரபரப்பாக பேச்சு உலவுகிறது. அந்த தொழிலதிபர் உயிருக்கு பயந்து கொண்டு காவல்துறையிடம் புகார் செய்யாததால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரவில்லையாம்.சில மாதங்கள் மிரட்டல் இல்லாமல் நிம்மதியாக இருந்த மயிலாடுதுறை தொழிலதிபர்கள் தற்போது மீண்டும் நடுங்க ஆரம்பித்துள்ளனர்.
கேபிரியேல்
தொழிலதிபர் சுரேஷ் கொலைக்குப் பிறகு காவல் துறையின் கெடுபிடி காரணமாக சில மாதங்கள் அடக்கி வாசித்த கேபிரியேல், இப்போது மறுபடியும் பழைய பாணியில் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்துவிட்டாராம்.