இளைஞர்கள், இளம் பெண்களை ஆன்லைன் மூலம் ஒன்றிணைத்து கொடைக்கானல் மலை கிராமத்தில் இரவு போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இவ்விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், இளம் பெண்கள் 260 பேரை போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.
கொடைக்கானல் மலையில் உள்ள குண்டுபட்டி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு தனியார் தோட்டத்தில் சட்டவிரோதமாக போதை விருந்து நடைபெறுவதாகவும், இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும் மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மூன்று டி.எஸ்.பி.க்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரைக் கொண்டதனிப்படையினர் குண்டுபட்டி மலை கிராமத்துக்குச் சென்று தனியார் தோட்டத்தை நேற்றுமுன்தினம் இரவு சுற்றி வளைத்தனர். அங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், ஐ.டி. ஊழியர்கள் என 260-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பலர் இரவு விருந்தில் கலந்து கொண்டது தெரியவந்தது.
அங்கு போலீஸார் சோதனை செய்தபோது விருந்தில் கஞ்சா,போதை காளான், எல்.எஸ்.டி.ஸ்டாம்ப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும், போதையில் ஆண்கள், பெண்கள் கேளிக்கை நடனம் ஆடியதும் தெரியவந்தது. அங்கிருந்த போதைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த விருந்தில் வெளிநாட்டினர் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து தோட்ட உரிமையாளர் கற்பகமணி, இரவு போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த ஹரிஸ்குமார், தருண்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இளைஞர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. போதை பொருட்களை பயன்படுத்துவது குற்றம் என எச்சரித்து விருந்தில் பங்கேற்ற 260 இளைஞர்கள், இளம் பெண்களை விடுவித்தனர்.
இளைஞர்களை ஆன்லைன் மூலம் ஒருங்கிணைத்தவர்களிடம், ஒரு நபருக்கு எவ்வளவு தொகை பெறப்பட்டது. இத்தனை பேரைஇணைத்தது எப்படி சாத்தியமானது. இத்தனை பேரை ஒருங்கிணைக்க எத்தனை நாட்கள் தேவைப்பட்டது. கஞ்சா, போதைக்காளான் ஆகியவை எங்கிருந்து பெறப்பட்டன. இதற்கு முன்புஇதுபோன்ற இரவு விருந்துகளை கொடைக்கானலில் நடத்தி இருக்கிறீர்களா என்பன உட்பட பல்வேறு கேள்விகளை கற்பகமணி, ஹரிஸ்குமார், தருண்குமார் ஆகியோரிடம் போலீஸார் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.