தமிழகம்

வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

நடிகர் விஜய், சினிமா தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருமான வரித்துறை மத்திய அரசின் நிதித்துறையில் அங்கம் வகிக்கக்கூடிய தனி அமைப்பாகும். நாடு முழுவதும் உள்ள தொழிலதிபர்கள், சினிமா துறையினர் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் குறித்து ஏதாவது முக்கிய தகவல் கிடைக்கும் நேரத்தில் வருமான வரித்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்துவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல்தான் தமிழகத்திலும் தற்போது சோதனை நடந்துள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றார்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நேற்று தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ‘‘இந்தியாவிலேயே திரைப்படங்களுக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை திட்டம் தமிழகத்தில்தான் முதல்முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT