கோப்புப் படம் 
தமிழகம்

சுழல் விளக்கு காரில் வலம் வந்த போலி அதிகாரி கைது: உயர் நீதிமன்ற நீதிபதியின் புகாரால் போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

ஊழல் கண்காணிப்பு அதிகாரி என்ற பெயரில் காரில் அரசு முத்திரை, சுழல் விளக்குடன் வலம் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

உயர் பதவி, பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமே கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பயன்படுத்த அனுமதி உள்ளது. மேலும் அந்த சிவப்பு விளக்கு சுழலாமல், ஒலி எழுப்பாததாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் நெறிமுறை வகுத்துள்ளது. அவசர சேவைகளான போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினரின் வாகனங்களுக்கு ஊதா விளக்கு பொருத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நேற்று முன்தினம் காலை ஒரு கார் வேகமாக சென்றுள்ளது. அந்த காரில் சுழல் விளக்குடன் அரசு முத்திரையும் இருந்தது. ‘விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, மாநில பொதுச் செயலாளர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த பெயர் பலகையும் இருந்தது.

அந்த வழியாக சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி இதை கவனித்து, அண்ணா சதுக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, விரைந்து சென்ற போலீஸார், சுழல் விளக்குடன் கூடிய காரை பின்தொடர்ந்து சென்று, வழிமறித்து நிறுத்தினர்.

காரில் திருவான்மியூரை சேர்ந்த பிரசாத் பாபு (38) என்பவர் இருந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் ஆவணங்களை கேட்டபோது, அவர் காண்பித்த அடையாள அட்டை போலி என்பதும், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் சுழல் விளக்கு, அரசு முத்திரை ஆகியவற்றை காரில் பொருத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், போலி அடையாள அட்டை கைப்பற்றப்பட்டன. விசாரணைக்குப் பிறகு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT