தமிழகம்

ஒரு அப்பாவின் ஆனந்தக் கண்ணீர்!

செய்திப்பிரிவு

என் மகன் சரவணன் அவனது மொபைலில் ஜிமெயில் செய்தியை காட்டியபோது திக்குமுக்காடிப் போனேன். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தகப்பா’ என்று உள்ளம் கூவியது. ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.

3 ஆண்டுக்கு முன்பு சென்னை

பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள, மகனும், என் மனைவியும் பள்ளிக்கு சென்றிருந்தனர். மனைவி மதியம் போன் செய்தாள். ‘‘சரவணனை 11-ம் வகுப்பில் ஃபெயிலாக்கப் போகிறார்களாம்” என்றாள்.

பல ஆண்டுகளாகவே நான் எதிர்பார்த்ததுதான். ஒவ்வொரு ஆண்டும் கடைசி மாதம் சற்று நன்றாக படித்து, அடுத்த ஆண்டுக்கு தாவுவதே அவனது சாதனையாக இருந்தது. அதற்காக, அவன் முட்டாள் இல்லை. சராசரிக்கும் சற்று கூடுதலான அறிவுள்ளவன்தான்.

டெல்லியில் வசித்தபோது என் மகனை சிறந்த பள்ளியில் சேர்க்க முயற்சித்தேன். கே.ஜி. வகுப்புக்கான நேர்காணல், தேர்வை அவன் மிக சாதாரணமாக எதிர்கொண்டான். 2,500 பேரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 250 பேரில் அவனும் ஒருவன். ஆனால், படிப்பது, எழுதுவதில் அவன் ரொம்ப மெதுவாகவே இருந்தான். நானும் பள்ளியில் ஸ்லோ பாய்தான். அதற்காக என்னை யாரும் முட்டாள் என்று சொன்னதில்லை.

பள்ளியில் அவன் எப்படி இருக்கிறான் என்று ஆசிரியரிடம் கேட்டால், ‘‘யாரையும் தொந்தரவு செய்யமாட்டான். தனக்கென தனி உலகில் சஞ்சரிக்கிறான்’’ என்பார்கள். படிப்பில்தான் அவனை குறை சொல்வார்கள். ஆனால், எல்லா ஆசிரியர்களும், உங்கள் மகன் மிகவும் இனிமையானவன் என்பார்கள்.

‘அவன் டிஸ்லெக்சிக்’ என்று ஓர் ஆசிரியர் சொன்னார். பின்னர் அவரே, ‘‘அவன் டிஸ்லெக்சிக் இல்லை. கவனம்தான் வேறு எங்கோ உள்ளது’’ என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் வகுப்பின் தொடக்கத்தில், ‘‘சரவணன் போன்ற நல்ல மாணவனை காண இயலாது’’ என்பார் வகுப்பு ஆசிரியை. அரையாண்டுத் தேர்வின்போது, ‘‘நல்லபையன்தான். ஆனால், படிக்க மாட்டேன் என்கிறானே’’ என்று சலித்துக்கொள்வார். அடுத்த மாதங்களில் நிலைமை தீவிரமாகும். மனைவியும் அவனை படிக்க வைக்கிறேன் என்ற பெயரில் சித்ரவதை செய்வாள்.

அந்தப் பள்ளியில் மெதுவாக படிக்கும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்பு நடத்தப்படும். அதற்கு தென்னிந்திய மாணவர்களை மட்டுமே அனுப்பினர். ஒருநாள் அந்த சிறப்பு பிரிவின் பொறுப்பு ஆசிரியை என்னிடம், ‘‘5-ம் வகுப்பு படிக்கும் உங்கள் மகனால் 3-ம் வகுப்பு பாடங்களைத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அவனது மூளை வளர்ச்சி குறித்து மருத்துவரிடம் காட்டுங்கள்’’ என்று கூறி, ஒரு டாக்டரின் முகவரியையும் கொடுத்தார்.

3 அமர்வுகளாக அவனை ஆய்வு செய்தார் டாக்டர். இதற்கு ரூ.5 ஆயிரம் செலவானது. மூன்றாவது அமர்வின் இறுதியில், ‘உங்கள் மகனிடம் பிரச்சினை இல்லை. வயதுக்கேற்ற மூளை வளர்ச்சி இருக்கிறது. ரூ.500 கொடுத்துவிட்டு, சான்றிதழை வாங்கிக் கொள்ளுங்கள்’’ என்றார்.

வந்த கோபத்தை, பள்ளியில் காட்டினேன். ஆசிரியர்கள் வாயடைத்துப் போனார்கள். மிகவும் போராடி, சிறப்பு வகுப்பில் இருந்து அவனை நீக்கச் செய்தேன்.

விளையாட வெளியே செல்லும்போதும், மற்ற சிறுவர்களின் உற்றதோழனாக இருந்தான் சரவணன்.நண்பர்களிடம் பல்வேறு விளையாட்டுகள் பற்றி விவாதிப்பான். ஆங்கில நாளிதழில் விளையாட்டுப் பக்கங்களை விடாமல் படிப்பான்.

அவன் 7-ம் வகுப்புக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் நிறுவனம் சார்பில்ஒரு குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டது. எங்கள் ஊரில் அழிந்துவந்த பனையேற்றம் தொடர்பாக என் மேற்பார்வையில் என் கேமராவில் வீடியோ எடுத்து,‘தேசிய மரம்’ என்ற பெயரில்குறும்படமாக்கி சமர்ப்பித்தான். 2 விருதுகளை வென்ற அது,இங்கிலாந்தில் பள்ளி மாணவர்களுக்கான வீடியோ பாடங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியை சொன்னார்.

என்ன இருந்தாலும், பள்ளியில் மதிப்பெண் பெறாவிட்டால், மற்ற நற்சான்றிதழ்கள் எல்லாம் வீண்தானே?

பின்னர், டெல்லி கல்விச் சூழல் பிடிக்காமல், மனைவி, குழந்தைகளை சென்னைக்கு அனுப்பினேன். சென்னையில் நிலவிய கல்வி முறை, பெற்றோரின் மன ஓட்டம் என் மனைவிக்கு தனி அழுத்தத்தை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

10-ம் வகுப்பில் பரவாயில்லை என்ற அளவுக்கு கிரேடு பெற்றதால், ஓரளவு பிடிவாதத்துக்கு பிறகு, 11-ம்வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவே கிடைத்தது.

இந்த காலகட்டத்தில் பள்ளிமுதல்வர், அலுவலக ரீதியாக எனக்கு நண்பரானார். ‘‘பள்ளியிலேயே ரொம்ப ஒழுக்கமானவன் உங்கள் பையன்’’ என்று, பார்க்கும் போதெல்லாம் சொல்வார்.

டெல்லியில் படித்ததால், ஆங்கிலம், இந்தி அவனுக்கு சரளமாக வந்தது. நெல்லைத் தமிழும்பேசுவான். இதனால் பள்ளியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பேச்சுப் போட்டியில் முதல் பரிசு என மற்ற விஷயங்களில் பிரகாசித்தான். ஆனால் பாடத்தில் மட்டும் பிரகாசிக்க முடியவில்லை. எங்கோ ஓரிடத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அது என் மகனிடம் இல்லை என்பதையும் உறுதியாக நம்பினேன்.

இறுதித் தேர்வில் மதிப்பெண் குறைவு என்பதால், மீண்டும் அவன் 11-ம் வகுப்பில் படிக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். இதைத்தான் மனைவி என்னிடம் போனில் சொன்னாள்.

ஆனால், ஃபெயிலான மாணவன் என்ற கோணத்தில் அவனைக் காண விரும்பவில்லை. அவனாலும் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. வீட்டுக்கு சென்றதும், அவன் என்னை பார்த்த கோணம், வாழ்நாளில் மறக்க இயலாது. பார்க்க பாவமாகவும் இருந்தது.

பின்னர் ஒருநாளில், ‘‘சரவணனை பாலிடெக்னிக்கில் சேருங்கள். முடியாததை திணிக்காதீர்கள்’’ என்றார் ஒரு ஆசிரியர். எனக்கும் அது சரியென்று பட்டது.

பாலிடெக்னிக்கில் படித்த மாணவர்கள் லேட்டரல் என்ட்ரி மூலம் பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு சேர முடியும் என்பது எனக்கு காதில் தேன் பாயும் செய்தி. மனதை தயார் செய்துகொண்டு, சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் சென்றேன். என் மகனுக்கு அங்கு கேட்ட பாடப் பிரிவே கிடைத்தது.

அவன் பாலிடெக்னிக்கில் சேர்ந்து 3 ஆண்டுகள் ஆகிறது. அவனிடம் ஏகப்பட்ட மாற்றங்கள்.

பள்ளியில் படிக்கும் வரை என் பெற்றோரை பார்க்கக்கூட நேரம் கிடைக்காத அவனுக்கு, இப்போது அவர்களுக்கு பணிவிடை செய்யநேரம் கிடைத்தது. ‘படி... படி...’ என்றுஅம்மாவின் கெடுபிடி இல்லை. இதனால் என் மனைவியும் அழுத்தத்தில் இருந்து விடைபெற்று இருந்தாள். சரவணன் சுதந்திரக் காற்றை அனுபவித்தான். செல்போனில் புதிய திரைப்படங்களை டவுன்லோடு செய்து பார்த்தான். அவனது வயதுக்கு உட்பட்ட செயல்களை நான் தடுத்ததே இல்லை.

வீட்டுச் செலவை அவன் கவனிக்கும் விதமாக பணம் முழுவதையும் அவனையே கையாள வைத்தேன். செலவு போக நிறைய பணம் மிச்சப்படுத்தினான். 18 வயதை தாண்டியதும் கார் ஓட்ட கற்றான். தாத்தா பாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, உறவினர்களை அழைத்து வருவது எல்லாம் அவன்தான்.

தேர்வு என்றால் அதிகாலையில் 3-4 மணிக்கெல்லாம் எழுந்து படித்தான். மூன்றாம் ஆண்டு இறுதியில் அவனது மதிப்பெண் மொத்தம் 80 சதவீதம்.

அவன் லேட்டரல் என்ட்ரி மூலம் சென்னையில் உள்ள பிரபல இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர வேண்டும் என்பது என் கனவு. ஆனால், 90 சதவீத மதிப்பெண் வேண்டும் என்றார்கள். கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்து, நாங்கள் விரும்பிய கல்லூரியிலேயே இடம் உறுதியாகும் வரை இதயத்தில் ஏற்பட்ட துடிப்பை, பரபரப்பை விவரிக்க வார்த்தை இல்லை. மனைவியிடம் இதை போனில் தெரிவித்தபோது நா தழுதழுத்தது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்கள் அவனை அவமதித்தது ஒரு கணம் கண்முன் வந்தது.

என் தோழி ஒருவரது மகளும் அவனது வகுப்பில்தான் படிக்கிறாள். சில வாரங்கள் கழித்து அவளைப் பார்த்தபோது, ‘‘அங்கிள், போன வருடம் வகுப்பு டல்லாக இருந்தது. சரவணன் வந்த பிறகு வகுப்பு கலகலப்பாக மாறிவிட்டது’’ என்றாள்.

இந்த நிலையில், பாலிடெக்னிக்கில் அவனது வகுப்பு பேராசிரியை சமீபத்தில் அவனுக்கு ஒரு மெயில்அனுப்பியிருந்தார். ‘எந்த நிலையிலும் அவனுடைய பண்பை விட்டுக் கொடுக்காததால், 2019-ம்ஆண்டுக்கான சிறந்த மாணவனாக என் மகனை தேர்வு செய்திருப்பதாகவும், தங்களது பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவன் என்பதில் அவர்கள் பெருமை கொள்வதாகவும்’ எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை வாசிக்க வாசிக்க என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. உரத்தகுரலில் அழவேண்டும் போலிருக்கிறது!

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.- குறள்

SCROLL FOR NEXT