நடிகர் விஜய் நடிக்கும் படபிடிப்பு தளத்தில் ரசிகர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைக்கும்போது காரில் வந்து இறங்கிய விஜய் போலீஸாரை தடுத்து ரசிகர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினார்.
நடிகர் விஜய் நடித்த பிகில் படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது. அந்தப்படத்தின் வசூல் ரூ.300 கோடி எனக்கூறப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் காலையில் அப்படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்ஸியர் உள்ளிட்டோர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மாஸ்டர் படத்துக்காக நெய்வேலியில் படபிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த வருமான வரித்துறையினர் அவரை சென்னை அழைத்து வந்தனர். வரும்போதே விஜய்யின் இல்லத்தில் ரெய்டு நடந்தது. அதன்பின்னர் 2 நாட்களாக ரெய்டு நடந்தது.
இந்நிலையில் நேற்று ரெய்டு முடிந்து இன்று நெய்வேலி சுரங்கப்பகுதியில் மீண்டும் மாஸ்டர் படபிடிப்பில் விஜய் கலந்துக்கொண்டார். அப்போது அங்கு வந்த பாஜகவினர் படபிடிப்புக்கு அனுமதி அளித்தது குறித்து ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டனர்.
போலீஸாரும் குவிக்கப்பட்டனர். மோதல் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீஸார் அனைவரையும் கலைந்துப்போகச் சொன்னார்கள். அப்போது விஜய் ரசிகர்கள் கலைந்து செல்லாததால் போலீஸார் லேசாக தடியடி நடத்தினர். அப்போது அங்கு வேகமாக காரில் வந்து குதித்து இறங்கிய விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக கையசைத்து கலைந்துப்போகச் சொன்னார்.
அந்த மைதானத்தில் முன்னும் பின்னும் நடந்து சமாதானப்படுத்தி ரசிகர்களை கலைந்துப்போகச் செய்தார். பின்னர் அவரது காரில் ஏறிப்புறப்பட்டுச் சென்றார்.