அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இரா. முத்தரசன் இன்று (பிப்.7) வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து வரம்பு மீறி பேசி வருகிறார். அண்மையில் மதவெறிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் “இந்து பயங்கரவாதம் உருவாகும்” என மதச் சிறுபான்மை மக்களை மிரட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கும்பல் வன்முறையில் ஈடுபட்டு வரும் மதவெறியர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். மதவெறி சார்ந்து பேசியதன் மூலம் அரசியல் சட்டத்தின்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழி மற்றும் ரகசிய காப்புப் பிரமாணத்தை ராஜேந்திர பாலாஜி அப்பட்டமாக மீறியுள்ளார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மதவெறிப் பேச்சை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ரகசியக் காப்பு உறுதிமொழியை மீறிய அவரை அமைச்சரவையிலிருந்து உடனடியாக விலக்க வேண்டும் என
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.